பிறப்புரிமை

பிறப்புரிமை

பிறப்புரிமை என்றொன்று
கிடையவே கிடையாது
இருப்புரிமை ஒன்றுதான்
இருப்பதெல்லாம்..

அப்பனுக்குள்ளே
அடங்கியிருந்தேன்
ஆண்டாண்டு காலங்களாய்..

உள்ளே "இருக்க"
உரிமை மறுப்பு
உறுப்பு மாறினேன் உடனடியாய்..

வட்டக் கோப்பைக்குள்
வந்து விழுந்ததுளி
வசதியாய் இருந்தேன்
வாரக்கணக்கில்.

ஈரைந்து மாதங்கள்
இருந்தபின் அங்கும்
உருவம் பெருத்ததால்
உரிமை மறுப்பு.

உண்மையில்

பிறப்பு என்பதே
கருவறையில்
இருப்புரிமை மறுப்புக்கு
இன்னொரு பெயர்தான்.

பிறப்பதில்
பிறப்பதில்லை
பிறப்புரிமை...
உன்னால்
பிறப்பதில்
பிறக்கிறது..

இதில்
பிறப்பில் உரிமையென்ன??????

திறப்பில்லாத
அறைக்குள் சிக்கி
திசைகள் தெரிந்து பயனென்ன?

இறக்கும் தேதிக்கு
காத்திருக்கத்தான்
இருக்குது உரிமை வேறென்ன?

உரிமைக்கு ஒழுங்காய்
வரையறை இல்லை
உண்மை இதுதான் கேளுங்கள்.

இறைவனைப் போலே
இதுவும் வெறுமை
வெறுங்கையோடு தேடுங்கள்..

பிறப்புரிமை ஒரு
பெருவே தாந்தம்
பொறுத்திருந்தே அதைப் புரிந்திடுக..

அன்றேல்

பொறுப்புள தலைமுறை
பின்னே வருகுது
குழப்பம் தராமல் விலகிடுக..

பிறப்புரிமை என்றொன்று
கிடையவே கிடையாது
இருப்புரிமை ஒன்றுதான்
இருப்பதெல்லாம்.

#பிறப்புரிமை_போராலிஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்