மழை வரட்டும்

முகத்தில்
துப்பட்டா கட்டாத
முச்சந்தி முல்லைக்கு
முகம்கழுவ,

பொத்துக்கொண்டு
கொட்டி
புளியங்காய்களுக்கு
போட்டிபோட்டுப்
பொட்டு வைக்க,

வேண்டுமென்றே
அவனுக்கு அவள்
துப்பட்டாவால்
குடை பிடிக்க,

ஹெல்மெட் அணியாத
தேசிய குற்றவாளிக்கு
தீர்வான தண்டனையாய்
முகத்தில் அலகு குத்த,

ஐந்து மணிக்கு எழுந்து
ஆசையாய் அவள்போட்ட
அஞ்சுபுள்ளி கோலத்திலிருந்து
அவனியை காப்பாற்ற,

அவனுக்கே தெரியாமல்
அவள்மீது அவனுக்கு
ஆசைவர,

நடைபாதை
உழைப்பாளிக்கு
உடலளவில் விடுமுறை தர,

ஒரு நூல் தடையும்
குறுக்கே இல்லாததால்
கருணாஸை பிடித்த
தனிப்படை போல,
நிலத்தடிக்கு
நேரெசென்று
மழைநீர் அரசியல் பேச,

சாலையோரச் செடியில்
தேங்கிய தண்ணீர்,
சிறுவனின் சிறுநீரோடு கலந்து
ராசாவுக்கான
தனிப்படை போல
போகுமிடம் தெரியாமல்
போக்கிழந்து போக,

எப்போதும் விரட்டும்
கடைக்காரன்
கொஞ்ச நேரம் சீ..போ
சொல்லாமல் இருக்க,

எப்போதும்
கவிதையோடு பயணிக்கும்
கவிப்போம்
இது கவிதையா? என்ற
குழப்பத்திற்கு ஆளாக,

அவ்வப்போது மழை வரட்டும்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்