வையத் தலைமை கொள்



என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான்.#௦௩ (#03)

மீண்டும் அனைவருக்கும் வணக்கம்.

                   எதிர்பாராத அளவிற்கு ஆதரவு நல்கும் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னதான்  நினைத்தான் எட்டய   புரத்தான் தொடரில் 3வது கட்டுரையாக வையத் தலைமை கொள் என்கிற வீரியமிக்க சொல்லில்  பாரதி விதைக்க நினைத்தது குறித்து.
    

யாரைத் தலைவனாக்க 
    யாருக்கும் தெரியாது
தலைவரென்றால் யாரென்று
     தலைவருக்கும் தெரியாது
எப்படியும் இயக்கமுண்டு
     எப்படியோ தெரியாது
இருந்தாலும் வாழ்கின்றோம் 
     ஏனென்று தெரிyathu  
                                     
                                  -நெய்தலான் 

புதுக்கவிஞர் நெய்தலானின்  வரிகள் பாரதியின் அதே உள்ளக்  குமுறலை அள்ளித் தெளிக்கிறன.
நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால் .
நினைத்தால் நெஞ்சு  கொதிக்கிற வரிகள்.  

     எவனுக்கோதானே பிரச்சினை  என் மயிர்முதல் உயிர்வரை பத்திரமாய்த்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள மட்டும் சமுதாயத்தை பார்க்கும் மனிதர்கள் பலரை பெற்றிருக்கிறோம் என்பது மட்டும் கொஞ்சம் வருத்தத்தோடு ஒப்புகொள்ள வேண்டிய  உண்மை. 

        இந்த நெஞ்சக் கொதிப்போடு சமுதாயத்தை பார்க்கையிலே இப்படி நிலை கெட்டுபோன இந்த மனித குலம் இனி எப்படி மாறும் என்பதும்,எப்படி மாற்றுவது என்பதும்  பெருத்த வலியாக கூடவே  இணைந்து கொள்கிறது. இப்படி வலியோடு கணக்கிற மனதுக்கு மருந்து தடவி மார்க்கமும் தருகிறான் மானசீக குரு பாரதி. என்ன செய்வதென்கிற கேள்விக்கு பதிலாக நொந்து போன நெஞ்சத்தோடு இறுதி முடிவையும் தானே எடுக்கிறான் பாருங்களேன்.
வல்லமை தாராயோ –இந்த 
நானிலம் பயனுற வாழ்வதற்கே
                          என்று தன் அன்னை பராசக்தியிடம் வேண்டுகிறான்.இந்த உலகை நானே காப்பாற்றுகிறேன் அதற்கான வல்லமையை எனக்கு கொடு. இந்த மாநிலம் முழுதும் பயனடைகிற வண்ணம் செய்கிறேன் என்று வேண்டுகிறான். நல்லதொரு தலைமை இல்லாது போனால் நாற்புறமும் சிதறியோடி  நாடழிந்து போகுமென்பதை நன்கு உணர்ந்திருக்கிறான் பாரதி .அதை உணராமல்தான், அரசியல் மேடையில் ஆள்மாற்றி  விளையாட்டு காட்டிகொண்டிருக்கிற சமுதாய சூழலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இவர்கள்தான் தலைவர்கள் என்கிற இடத்தில் அமர்ந்து வெகு காலமாக நம் மனதை  ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள். 

 இப்படி இருக்க எப்படி இளைய சமுதாயம் இவர்களிடமிருந்து எப்படி தலைமைப்பண்பை கற்கும். ஒருவேளை கற்றால் அதைவிட பெரிய சங்கடம் எதிர்கால உலகுக்கு வேறேதும் இருக்காது. அதற்காக இப்படி விடலாமா? . போர்குணம், விடாமுயற்சி, தலைமேற்கொள்ளல் என இந்த உயர்பன்புகளை இவர்கள் மறந்துவிட மாட்டார்களா?
       


      
  மாபெரும் இளைய சக்தி படைத்த நாடான இந்தியாவில் , ஒரு சமூகத்து இளைஞர் படையின் ஒட்டுமொத்த எழுச்சி என்ன செய்யும் என்பதற்கு முன்னோட்டமாக தமிழக இளைஞர் படை நடத்திக் காட்டி வென்ற “மெரினா புரட்சி” நம் இளைஞர்களினின் படைமடமும் போர்குணமும் பாரறியச் செய்ததென்பது உண்மை.
ஆனால் ஒன்றினைந்தோம் வென்றுவிட்டோம்” என்று மார்தட்டி கொள்கிறோமே தவிர நம் தலைமை பண்புகளின் நிலைமை குறித்து ஆய்ந்தோமில்லை. ஆட்சி இளைஞர் கையில் வர வேண்டும். இளைஞர்கள் தலைமையேற்று அரசு எந்திரம் செயல்பட வேண்டும் என்றெல்லாம் மேடைகளில் பேசி கைதட்டல் வாங்கிகொள்கிற அளவில் தான் (பேச்சளவில்) இளைஞர்களின் தலைமைப்பண்பும் அவர்தம் தலைமேற்கொள்ளும் திறமும் என்றால் அதை ஒப்புகொள்ள மனம் மறுக்கிறது.

ஆக உண்மைநிலை என்ன என ஆராயப் புகுங்கால் நாம் அறிகிற உண்மை இன்றைய இளைஞர் கூட்டம் தம் போர்குணம் மறக்கவில்லை.இன உணர்வு இழக்கவில்லை. உறுதிப்பாடு, தன்னம்பிக்கை, இன்னும் பல என எவற்றிலும் குறைந்துவிடவில்லை .அனால் அவற்றை பொது வாழ்விற்கு பயன்படுத்துவதில்லை என்பதே வருத்தமளிப்பதாய் உள்ளது. நீங்கள் யோசித்து பாருங்கள், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆன தமிழ் இளைஞர் தன் தலைமைபண்பினாலே அந்த நிறுவனத்தின் தன் துறையை ஏற்று  திறம்ப செய்கிறார் ( இல்லை என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க இயலாதே ). தன் தலைமைப்பன்பையும், ஆற்றல் திறத்தையும் அங்கு அவரால் முழுவீச்சுடன்  செயல்படுத்த முடிகிறது.
இன்றைய இளைஞர்கள் சமூகம் என்பதில்  மட்டுமல்லாது  சகலத்திலும் சற்று விழிப்புணர்வு கொண்டவர்கள். கடந்த தலைமுறையை போல எதையும் கண்டும் காணாமல் செல்வோர் அல்லர். சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண எதிலும் தங்கள் பங்கை சிறப்பாக செய்ய தயாராக உள்ளனர். - மீண்டும் கவனியுங்கள் - எதிலும் தங்கள் பங்கை சிறப்பாக செய்ய தயாராக உள்ளனர் என்பதை எவ்வித  மறுப்புமின்றி ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் தொடங்கி வைக்கிற தலைமைபண்பு (Leadership Qualitiy) தான் குறைவாக உள்ளது.
போர்க்களப் புயல் மாவீரன் நெப்போலியன் முதலில் அடிப்படை வீரனாக மட்டுமே படையில்  சேர்க்கப்பட்டான். அது பெரும் வருத்தமாக இருந்தது அவனுக்கு. தன் திறமைக்கு ஏற்ற பொறுப்பு இது இல்லையே என மனம் நொந்து போகிறான். இறுதியில் , காலம் அவனது தலைமைபன்புகள் வெளிவர் ஓர் வாய்பளித்தது. தான் தலைமை ஏற்று நடத்த கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கிரேப் ஷாட் என்றொரு  புது தந்திரம் ஒன்று செய்து போரில் வெற்றி ஈட்டுகிறான். படைக்கு நெப்போலியன் மேல் அப்போதுதான் நம்பிக்கை வருகிறது.  

அப்படி ஒரு திருப்புமுனை வாய்ப்பு நம் இளைஞர்களுக்கு இந்த அரசால் பல நேரங்களில் பல இடங்களில் வழங்கப்பட்டும் கூட, யார் தொடங்கிவைப்பது என்கிற குழப்பத்திற்கு ஊடாக அன்றாட வாழ்க்கை சக்கரத்தின் வேகத்தில் அதை மறந்தும் போகிறோம். நெப்போலியன் வாழ்வில் தலைமை பண்புகள் செய்த மாற்றத்தால்தான் அவன் வாழ்வில் பெரும் திருப்புமுனை ஒன்று நிகழ்ந்தது. படிக்க படிக்க சிலிர்க்கும் வரலாறு அது. அதன் பின் அவன் அடைந்த அத்துனை போரின் வெற்றிகளிலும் அவனது சிறந்த தலைமைப் பண்பே பெருந்துணையாக நின்றிருந்தது.  ஒருவேளை அந்த  போரில் வழக்கம் போலவே தன் தலைமைபண்பை வெளிக்காட்டாமல் போரில் தோற்க நேர்ந்திருந்தால் நெப்போலியனை இன்று நாம் பேசியிருந்திருக்க மாட்டோம் –வரலாறில் இப்படி ஒருவன் இருந்திருக்கவே  மாட்டான்- தலைமைபன்புகள் மட்டுமே ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கு அடிகோலும்.சரியான தலைமை அமைந்தாலொழிய ஒரு கூட்டமோ குழுவோ அமைப்போ சமுதாயமோ எதுவும் வெற்றி பெற இயலாது.

எழில்மிகு இந்தியா ஏற்றமிகு நடைபோட இளைய தலைமுறை தலைமையேற்பது ஒன்றே சரியான வழியென தேர்ந்து தான் பாரதி நம்மை அறிவுறுத்துகிறான் வையத் தலைமை கொள்என்று. நல்லதொரு தலைவன் வருவான் நாடுவளம் பெற நல்வழி செய்வான் என எவரையும் எதிர்பார்த்திராதே. தருணம் வரும் வேளை தலைமை சரியாயிருந்தால் மரணம் கூட மகிழ்ச்சிதான். நீதான் தலைவன். உன் தலைமைக்காகத்தான் இந்த வையம் காத்திருகிறது. 
பிறப்புக்கு ஒரு வாய்ப்பு, 
இறப்புக்கும் ஒரு வாய்ப்பு.  
வாய்ப்புகள் வரும்போது தவறவிடாதே,                                                                                        
தலைமைகையில் வந்தபிறகு தவறிவிடாதே.

உன் தலைமைபன்புகளை வளர்த்துக் கொள். உன்னை அவை தலைவனாக்கும். முண்டாசுக் கவியாளன் மொழிந்த வண்ணம் தலைமைபன்புகளை வளர்த்துக்கொண்டு தரணியை நல்வழிப்படுத்த முயல்வோமாக...

வருவது வரட்டும் - நாம் 
வையத் தலைமை கொள்வோம் 

வையத் தலைமை கொள் :
வானளா உயர்ந்த புகழ்
வாழ்க்கை தரும் பாரதத்தில்
வாளா விருந்த தெல்லாம்
போதுமினி இளையோரே 
வந்திடும் வல்லர சென
வாய்பார்த்த லாகாதினி 
வையத் தலைமைகொள் வீர். 
                                               -நெய்தலான்     

அடுத்தடுத்த பதிவுகளை யுடனே பெற இணைந்து கொள்ளுங்கள்.

     என்றும் ன்புடன்
     உங்கள்
பாம்பன் மு.பிரசாந்த்
மின்னஞ்சல்:prasanthraman30@gmail.com
செல்லிடப்பேசி : 7299585174

கருத்துகள்

  1. அருமை பிரசாந்த். பாரதியின் வரிகள் எழுத்துப் பிழை இல்லாமல் வரவேண்டும். வாழ்த்துக்கள். - புலவர் இராமமூர்த்தி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதியன விரும்பு

மது செய்யும் மாயம்