தேசம்மா என்னும் திணைநிலத்தேவை

தேசம்மா ( சிறுகதைகள் )... வெளியீடு - காலச்சுவடு

என்ன சொல்லித் தொடங்குவது உங்களோடு..?
க.அரவிந்த்குமார் என்று ஒருவர். ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.

எழுத்தாளர்கள் ஜோ டிக்ரூஸ், என்.ஸ்ரீராம், இரா.முருகவேள், ஷாஜி, நக்கீரன் கோபால் மற்றும் திட்டமிட்டபடி திடீரென்று திருமாவளவன் என அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்து நேற்று (04.01.2020) அந்த நூலை வெளியிட்டனர்.

கூடவே அவருக்கு முக்கியமானவர்களும், அவரை முக்கியமானவராகக் கருதுபவர்களும் வந்திருந்தார்கள். இவ்வளவுதான் செய்தி...



என் அன்புள்ள அண்ணன் என்பதற்காகவும், அவரது ஆழஅகன்ற வாசிப்பைப் பலமுறை ஆச்சரியத்தோடு பார்த்தவன் என்ற முறையிலும் நானும் விழாவுக்குச் சென்று வந்தேன். அது அவருக்காக. ஆனால்...இந்தப் பதிவு
இந்தப் பதிவு முற்றிலுமாக அவர் நீங்கலானது. அவருக்கும் தேசம்மாவுக்கும் இருக்கும் தொடர்பு இந்தப் பதிவில் ஆட்டத்துக்கு இல்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்தப் பதிவு தேசம்மாவுக்கும், எனக்கும், உங்களுக்கும் மட்டுமானது.
மொத்தத்தில்,

இது தேசம்மாவைச் சொல்லும் பதிவு கிடையாது. தேசம்மா உணர்த்தும் தேவையைச் சொல்லும் பதிவு.
இந்த நூலை வாங்க வேண்டிய தேவை எல்லோருக்கும் இல்லை. ஆனால், உள்வாங்க வேண்டிய தேவை ஓவ்வொருவருக்கும் உண்டு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. (மறுவாசிப்புக்குப் பின்)

சரி… பேசத் தொடங்கலாம்…

15 சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு என்றபடிக்கு இதுவும் ஒரு பொத்தாம் பொதுவான கதைத் தொகுப்புத்தான். ஆனால், அது உள்ளடக்கியிருக்கும் வாழ்க்கைகளின் சூழல், ஐந்திணை நிலத்தின் நெடுங்காலத் தேவைகளில் ஒன்று.
விழாவில் பேசிய எழுத்தாளர் ஜோ டிக்ரூஸ் இதை இப்படி விளக்கினார். ஐந்திணை சமூகம் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதற்கான வாய்ப்பே அமையவில்லை. அதைச் செய்திருக்கிறது இந்த தேசம்மா என்று குறிப்பிட்டார். இன்னும் ஒருபடி மேலே போய், “நான். இந்த இலக்கியப் பேழையை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னதாகச் சொன்னார்.

இது கொஞ்சம் ஓவர்டோஸ் போலத் தெரியலாம். கடலோடி எழுத்தாளர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்வார்கள். குறைந்தபட்சம் மறுக்கவாவது மாட்டார்கள். (கத்தோலிக்கக் குமரி ஆத்தா சத்தியமா)

கடல் புரத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் கடலோடி சமூகம் குறித்த சமவெளி மக்களின் பெரும்பான்மையான புரிதல். காரணம், கடல்புரத்து வாழ்வியல் குறித்த உரையாடல் நிகழ்த்தப்படவேயில்லை. சமவெளிக்கு அது அறிமுகப்படுத்தப் படவேயில்லை.

இது ஒன்றே அண்மையிலிருக்கும் கடலோடியையும் கூட சமவெளிச் சமூகம் தனக்குச் சேய்மையாகப் பார்க்க வைத்தது என்பது நெடுங்காலமாக என் நெஞ்சத்து ஆதங்கம். (மலைவெளிக்கும் கூட பொருந்தும்) .

அந்த வகையில், மிடுக்கித் திரியும் மீடியாக்காரன் கதையையும், மிச்ச வாழ்வை மீனோடு வாழும் மீன்காரி கதையையும் ஒரே இடத்தில் பேசி, காலம் வேண்டிக்கொண்டிருந்த (நெய்தல் சமூகம் நெடுங்காலமாய் வேண்டிக் கொண்டிருந்த) உரையாடலுக்குக் களம் அமைக்கும் ஒரு கலப்பிலக்கியமாக (!!!) வந்திருக்கிறது தேசம்மா.

ஆம், கரிசல் இலக்கியத்தை கடலோடி வாசகன் ஊன்றி வாசிப்பது அரிது.  கடலோடி இலக்கியத்தை கிராமியக் கலைஞன் ஊன்றி வாசித்தல் அரிது.
அப்படிப் பிரிந்துகிடக்கும் வாசிப்பு வாழ்வியல்களை ஒவ்வொரு வாசகனுக்கும் ஒருசேர அறிமுகம் ( குறைந்தபட்சம் ) செய்யும் கலப்பிலக்கியமாகத்தான் வந்திருக்கிறது இந்த தேசம்மா.



சிறுகதைகள் எழுதும் எல்லா எழுத்தாளர்களுக்கும் முதலில் இரண்டு சவால்கள் வந்துவிடுகின்றன. ஒன்று அந்தக் கதை இதற்கு முன் சொல்லப்படாததாக இருக்க வேண்டும். இரண்டாவது, எழுத்தாளர் தன் எழுத்துப்பாணியின் தனித்துவத்தை ( கதைசொல்லும் திறனை ) கதையம்சத்தின் கரு சிதையாமல் நிரூபிக்க வேண்டும்.

இரண்டையுமே, ஒருவாறாக ஈடுகட்டித்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன கதைகள். தன் வாழ்வனுபவத்தையே கதைகளாகத் தேர்ந்தெடுத்திருப்பதால் கதை எங்குபோய் நிற்கும் என்பதை சில கதைகள் வாசகர்களுக்கு காதில் சொல்லி விடுகின்றன.

ஒவ்வொரு கதைக்கும் ஊடாக, மாற்றுக் கருத்தும் மன உளைச்சலும், முரணும், முட்டலும் மோதலுமாகத்தான் வாசித்து முடித்தேன் (அப்படித்தானே இருக்கணும்). கதையோட்டமும் வர்ணனையும் நம்மைக் கண்திறந்தும் கற்பனை செய்ய வைக்கும். எனினும் ஆங்காங்கே வசனங்களில் வரும் செயற்கைத்தனம், ஆசிரியருடைய பிராந்திய வாழ்க்கைப் புரிதலை உணர்த்துகிறது.

 
கதை மாந்தர்கள் நிஜ உலகில் இன்னும் இருக்கும் நிஜ மாந்தர்களாக இருக்கின்றனர். ரஜினி, கமல்,விஜயகாந்த், சூப்பர் சுப்பராயன் என வாசிக்கும் போதே நன்கறிந்த முகங்களை அறிமுகப்படுத்துவதால், மீதமிருக்கும் முகங்களுக்கு நம் மனம் நம்மை அறியாமல் உருவம் கொடுத்து விடுகிறது.(இது ஒரு நல்ல ப்ராக்டிஸ்)

அதேபோலத்தான், அனகாபுத்தூர் பாலம், மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி , தி.நகர் முட்டு சந்து எனப் பாத்திரங்களை, வாசகனுக்குத் தெரிந்த இடங்களில் திரிய விடுகிறார்.

அதெப்படி? ஒரு படைப்பில் சொல்லப்பட்டிருக்கும் இடம் எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கும் என்ற நியாயமான ( ஜனநாயகமான ) கேள்வி இப்போது எழ வேண்டும்.



அதுதான், தேசம்மாவை தனித்து நிற்க வைக்கும் அம்சமே.

தி.நகர் முட்டு சந்து தெரிந்தவருக்கு திற்பரப்பு தெரியாமல் இருக்கட்டும். அப்படியே திற்பரப்பு தெரிந்தவருக்கு அனகாபுத்தூர் அறியாத ஒன்றாகவே இருக்கட்டும். அந்த மக்களின் வாசிப்புலகத்துக்குள் கடலால் இறந்த வருத்திச்சியையும், கடலைக் கைவிட்டு கடமையால் இறந்த கன்னியப்பனையும் அறிமுகம் செய்து வைக்கிறது தேசம்மா என்னும் கலப்பிலக்கியம்.

அதனாற்றான் சொன்னேன். இது தேசம்மா பற்றி சொல்லும் பதிவு அல்ல. தேசம்மா உணர்த்தும் தேவையைச் சொல்லும் பதிவு.
தேசம்மா; விலை 180/-; வெளியீடு:காலச்சுவடு; க.அரவிந்த்குமார்;



இயலுகின்ற சடப்பொருள்கள்
எல்லாம் தெய்வம் - என்
எழுதுகோல் தெய்வம் எந்தன்
எழுத்தும் தெய்வம்...
 


என்றும் அன்புடன்
பாம்பன் மு. பிரசாந்த்
06.01.2020 - 02:02 மணி (இரவு) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்