சதுப்பு நிலம் - முதல் புரிதலும் முழுப்புரிதலும்

சதுப்பு நிலம் - முதல் புரிதலும் முழுப்புரிதலும்


சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்பு.. பாழாகும் சூழலியல். மீட்க வேண்டியது நம் கடமை. தமிழனா இருந்தா ஷேர் பண்னு..

சதுப்பு நிலங்களின் மீதான கவனம், பெருவாரியான மக்களுக்கு இப்படித்தான் அறிமுகமாகிறது. போகிற போக்கில், கடந்துவிடும் ஒரு வரிச்செய்தியில், ஒரு உலகம் அடங்கியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

இதற்கு, முதலில் சதுப்பு நிலம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும். 

இணையம் வழங்கும் தகவல்களின் படி, அது கடலும் அல்லாத நீர்நிலையும் அல்லாத ஆனால் ஈரப்பதமாகவே இருக்கும் நிலம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.. ஆனால், சதுப்பு என்ற பகுப்புக்குள் ஒரு பல்லுயிர்ச்சூழல் இருப்பதை பலசமயங்களில் நாம் கவனிப்பதில்லை. அல்லது கவனத்துக்கு வருவதில்லை…

தோற்றத்தை பொறுத்தமட்டில் , முதலில் ஒன்றை தெளிவு பெறுவோம். சதுப்பு நிலம் என்பது நீர்நிலைகளுக்கான நீர்பிடிப்பு பகுதிகள் போன்றவைதான். உவர்நீர் மற்றும் நன்னீர் ஆகிய இரண்டு சதுப்பு பகுதிகள் உண்டு. இரண்டுமே  காய்ந்தால் உதிர்ந்து போகும் மண்கூட்டம்தான். ஆனால், தொடர் ஈரத்தால் நெருங்கியிருப்பதால் அவை சகதி போல காட்சியளிக்கும்.

மற்றபடி பறவைகள் வருவது இரண்டுக்கும் பொருந்தும். காரணம், வலசை போகும் பறவைகளுக்கு இயற்கையான உயிர்ச்சூழலும் , இரையும் இருக்கும் இடத்தை தன் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் பழக்கம் உண்டு

ஆனால், உருவாகும் தாவரங்கள் , மருத்துவ பண்புகள் ,நிலவும் உயிர்ச்சூழலின் வெப்பநிலை என எல்லாமும் இடத்துக்கு இடம் மாறுபடும்.. இதனால் அவற்றை தேர்ந்தெடுக்கும் பறவைகளின் வகைகளும் மாறுபடும். 

இன்னொரு நல்ல செய்தி தெரியுமா? ஒரு சதுப்பு நிலம் அருகில் இருக்கிறதென்றால், நீங்கள் நம்பிக்கையாக, நிலத்தடியில் இருந்து எடுத்து நல்லதண்ணீர் குடிக்கலாம். நிலம் மிகச்சிறந்த வடிகட்டி என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை, சதுப்பு நிலம் மிகச்சிறந்த நச்சு வடிகட்டி என்பது.

குப்பைமேடுகளாக மாற்றப்பட்டிருக்கும் பெருநகரப்பகுதிகளுக்கு அருகிலேயே சதுப்பு நிலத்தில் நல்லதண்ணீர் கிடைப்பதை கண்கூடாக பார்க்கமுடியும்.. நீர்பிடிப்புடன் இருக்கும் அல்லது இருந்த காயல்பகுதிக்கு (கடலோரங்களில் இருக்கும் கடலோடு சேராத நீர்நிலைப்பகுதிக்கு காயல் என்று பெயர் . எகா, புன்னைமரங்கள் வாழும் காயல் பகுதி என்பதால் புன்னைக்காயல் ) அருகில் எங்கு தோண்டினாலும் நண்ணீர் வருவதுதற்கு இதுதான் காரணம்.  

அதெப்படி என்றால், மற்றுமொரு ஆச்சரியமான உண்மை சொல்லட்டுமா? சதுப்பு என்றொரு பகுதி இருந்தால், அங்கு காலத்துக்கும் நல்லதண்ணீர் கிடைக்கும் பின்னாளில் சதுப்புத்தன்மை இல்லாமல் போனால் கூட . அதற்கு முக்கியமான உதாரணம் , சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. மெரீனா என்னும் முன்னாள் சதுப்புநிலம்.

1639ல் சதுப்பு நிலமாக இருந்த பகுதிதான் இன்றைக்கு மெரீனா கடற்கரையாக மாறி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 1881க்கு முன்பு வரை மெரீனா இருந்த இடத்தில் கடற்கரையே கிடையாது. அன்று சதுப்பு நிலமாக இருந்தபோது பூமிக்குள் நடந்த நண்ணீர் சேகரத்தின் விளைவுதான் இன்றும் மெரீனா கடற்கரையில் எங்கு தோண்டினாலும் நன்னீர் கிடைப்பது..

( மெரீனா கடற்கரையில் செயல்படும் உணவகங்களின் நீர் தேவைக்காக கடற்கரை மணலில் ஆங்காங்கே குழிதோண்டப்பட்டு, அடிபம்புகள் பொருத்தப்பட்டிருப்பதை அடுத்தமுறை போனால் கவனியுங்கள்)

இப்படி மறைந்துபோனாலும் மனிதர்களுக்கு உதவுவதை கைவிடாத சதுப்பு நிலங்களைத்தான் மனையடிகளாக அளந்தும், குப்பை மேடாக்கியும் அழகு பார்க்கிறோம்..

கண்டல் செடி, கண்ணா செடி, வெள்ளக்காடு, அலையாத்தி காடு என எத்தனை காரணப்பெயர்களால் அழைக்கப்பட்ட்டாலும் அவை அத்தனையும்  சதுப்புநிலக்காடுகள் என்பதுதான் சத்தியம். உலகின் மிக நீண்ட சுந்தரவனக்காடுகள் இந்தியா - வங்கதேசம் இடையே வங்காள விரிகுடாவை ஒட்டிய கங்கையாற்றுப் படுகையிலுள்ளவைதான். ( தோராயமாக 10000 ச.கி.மீ) . உலகிலேயே மிக நீண்ட சதுப்புநிலக்காடு  இந்தியாவில்தான் உள்ளது என்றால், உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடு தமிழகத்தில் உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில் (இதற்கு தில்லைக்காடுகள் என்ற பெயர் வந்தது வேறு கதை) கடலிலிருந்து தனியாக ஏறக்குறைய 3000 ஏக்கர் பரப்பளவில் , 1700 குட்டித்தீவுகளைக்க்கொண்ட இந்த உலகத்தின் உயிர்ப்பன்மையத்தை நேரில் பார்க்காமல் உணர முடியாது..

      

பிச்சாவரமும், முத்துபேட்டையும் இன்றுவரைக்கும் எந்த புயலிலும் கடல் சீறறத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் இந்த சதுப்பு நிலமும் அதன் கண்டல் காடுகளும் தான் என்றால் மிகையில்லை..

அதேசமயம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கழுவெளி சதுப்பு நிலம், 600 சதுர கிலோமீட்டரிலிருந்து 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் உணரும்போது மனிதர்கள் சதுப்புநிலத்தின் அவசியம் குறித்து என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது விளங்கும்..

இவையெல்லாம் ஏதோ அந்நியமான, வெளியூர் தகவல்கள்  போலத்தோன்றுகிறதா? சென்னைக்குள்ளேயே 5500 ஹெக்டேர் சதுப்பு நிலம் ( 1965ம் ஆண்டு கணக்கின்படி ) இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்.இன்று வெறும் 600 ஹெக்டேர் மட்டுமே மிச்சமிருக்கிறது (2013 கணக்கின்படி ).

பறக்கும் ரயில் திட்டத்துக்காக 100ஏக்கர், ஆயிரக்கணக்கில், ஐடி கம்பெனிகள், ஆயிரத்து 85 (1085 ) குடியிருப்புகள் , மாநகராட்சியின் இரண்டு குப்பைகிடங்குகள், மாநில, தேசிய கல்வி நிறுவனங்கள், கடல்சார் ஆராய்ச்சி மையம் (பெருங்கொடுமை) , காற்றாலைகள் அவற்றுக்கு போட்டியாக காற்றை திசைமாற்றும் உயர்மின்னழுத்த செல்போன் கோபுரங்கள், கூடாத குறைக்கு கழிவுநீர் கலப்பு மற்றும் இன்னபிற இத்யாதிகள் என சதுப்பு நிலம் சத்தமில்லாமல் சமாதியாக்கப்பட்டிருக்கிறது சென்னைக்குள்..


வங்கத்தின் பெருமை என சுந்தரவனத்தையும், தில்லையின் பெருமை என பிச்சாவரத்தையும், முகவை மாவட்ட பெருமை மன்னார் உயிர்க்கோளத்தையும் சொல்கிறார்கள். ஒரு நொடி யோசித்து பாருங்கள். பள்ளிக்கரணை சென்னையின் பெருமை இல்லையா?

ஒரு பெருவளத்தை, பேருக்கு கூட மிச்சம் வைக்காத சென்னை (அரசு, தனியார் நிறுவனங்கள் ) நீருக்கு கையேந்துவதை பார்த்தால், கோபம் வருவதில் தவறில்லை? பாதுகாக்க வேண்டிய எதையும் பாதுகாக்காமல், புதைந்து போனபிறகு புத்தியில் உரைத்து யாருக்கு என்ன லாபம்.?

400 ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த சென்னை என மார்தட்டும்போது, இனிவரும் உங்கள் தலைமுறை வாட்டர் பங்க்குகளில் நீர்பிடிக்கும் நரகமாக இருக்கும்  என்பதையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

நன்னீருக்கு , இயற்கை சூழலுக்கு, பறவைகள் வாழ்வுக்கு, கடலாமைகள் வலசைக்கு, மருந்துக்கு என மனிதர்களுக்காகவே எல்லாம் செய்யும் இந்த சதுப்பு நிலங்களுக்கு மனிதர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

இயற்கையை இயல்பாக இருக்க விடுவோம்.. இல்லாவிட்டால், இயற்கை தன் கடமையை செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்