விடிந்ததா?விடியலயா?

             வித்யாசமான தலைப்புகளை பார்க்கும்பொழுது வருகிற சிரிப்பை விட அலாதியான சுவாரஸ்யம் அப்படி ஒரு தலைப்பை  நேரடியாக நாமே சந்திப்பதில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக  "போங்கடி நீங்களும் ", "மொசரக்கட்டை","விரலா? வீக்கமா?" போன்ற தலைப்புகள் அந்த அனுபவத்தை ஏற்கனவே தந்தவை. அதே போன்ற தலைப்புதான் இதுவும் கூட.எதோ தூக்க கலக்கத்தில் 3 மணிக்கு எழுந்து கேட்கிற கேள்வியை தலைப்பாகவே தந்து விளையாடிய ஆவடி எழில் இலக்கிய பேரவைக்கு நன்றி.

13.08.17 அன்று ஆவை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை.

தலைப்பு:விடிந்ததா?விடியலயா?

கேள்விகளை ஆகூதியாக்கி
       விடைகளை பிராப்தம் பெற
வேள்வி நடத்தும் பேரவையே !

வெடிவைத்து தகர்த்தாலும்
    வெட்டுறாத பாறை-சிறு
தட்டுளிக்கு  கட்டுப்  படும்
            (அன்றேல்)
பசுமரத்து வேரோடி
     பலமான பாறைகூட
பாதியாக வெட்டுப் படும்.

மரத்துக்கும் தோல்வி
மலைக்கும் தோல்வி
விடியல் யாருக்கு...... .?

தானாக உடைந்ததை
தனித்தனியே உடைத்தெடுத்து
வியாபாரம் செய்பவர்க்கு
விடியல் இது.

விடிந்ததா ?விடியலயா?

வாதையால் பிரச்சினை உடல்நல னுக்கு
போதையால் பிரச்சினை பூவுல குக்கு
சீதையால் பிரச்சனை ராவணனுக்கு -அட
கீதையிலும் பிரச்சனை இது என்ன கணக்கு.

குற்றமிலா உத்தமனின்
      குலத்தில் கோளாறு.- போல
வரலாறாய் சுவடழிந்து
      வாழும் பாலாறு

நதிநீரும் இல்லையென்று
    சதிசெய்தார் அங்கே
சதியென்று தெரிந்தாலும்
   விதியென்றோம் இங்கே
சதியோ இது விதியோ அவர்
   கைவிரித்தார் அங்கே -நம்
பரணியள்ளி நம்மிடமே
    பாட்டிலாக்கி விற்றுவிட்டு
பணம்பார்க்க நம்முன்னே
    பைவிரித்தார் இங்கே.

விடிந்தது வியாபாரிக்கு?
விடியாதது விவசாயிக்கு?

விளைச்சல் வரட்டும் பின் விடியல் வரட்டும்

வேறென்ன சொல்ல - இனி
சோறு யார்க்கும் இல்ல.

என்றும் அன்புடன்
உங்கள்
பாம்பன் மு பிரசாந்த்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்