என்னை கவர்ந்த குறள்

இலக்கிய வளமை எவ்வளவாயினும், உலகளாவிய வெற்றிபெற அம்மொழி விஞ்ஞான மொழியாயும் இருத்தல் அவசியம்.


என்னைக் கவர்ந்த திருக்குறள் என்கிறபடிக்கு எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்த குறள் இதுதான். 

எல்லோர்க்கும் நல்ல அறிமுகமுள்ள ஓர் நல்ல அறிவுரை. ஆனால் அது அறிவுரை என்கிற கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஓர் அறிவியல் கிளி.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
என்றோ மறப்பது நன்று.

என்ன இது.. குறளையும் பொருளையும் குளறுபடி செய்கிறாயே என்கிறீர்களா?.கொதிக்க வேண்டாம். உண்மையில் இந்தக் குறள் இப்படி இருந்திருந்தாலும் நாம் போற்றித்தான் இருந்திருப்போம்.

இன்னும் ஒருபடி மேலேபோய்,
ஒரு சராசரி மனிதன் எப்படி தனக்கு நடந்த நன்றல்லதான ஒன்றை உடனே மறக்க முடியும்.அந்த உளவியலை நன்குணர்ந்தே வள்ளுவர் என்றோ ஒருநாள் அதை மறந்துவிடுவது நன்று என்றிருக்கிறார் என்று உரைகளும் வேறு சொல்லியிருப்போம்.

ஆனால்.....
அன்றே மறப்பது நன்று என்றான்.
ஏன் தெரியுமா?

மனித மூளை ஒவ்வொரு இரவும் உறங்குகிற போது அன்றைய நாளின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் பிரித்து முக்கியமானவை, முக்கியமற்றவை என்பதற்கேற்ப தற்காலிக மற்றும் நிரந்தர நினைவகங்களில் சேர்க்கும்.
இந்த மொத்த வினை (consolidation) நடக்கிறபோது மூளை நரம்புகளில் நடக்கும் புரதத் தொகுப்பு (protein synthesis) இதற்கான முக்கியக் காரணம்.
திடீரென விபத்து ஏற்படுவோர் அன்று விடியல் தொடங்கி நடந்த அனைத்தையும் மறந்துபோவது இந்த வினை நடக்காமல் போவதால்தான்.இது விரிக்கின் பெருகும்.

இப்போது பாருங்கள் எந்த ஒன்றையும் அன்றே மறந்துவிடுதல் அடுத்த நாள் நம்மை மீண்டும் குழப்ப,குரோத, மாச்சர்யமற்ற மனிதராக தொடங்க வைக்கும் என்பதற்கு பின்னே உள்ள மூளை அறிவியல் அந்த அன்றே என்கிற சொல்தான்.

ஒரே நாளில் இந்த குறளையும் பார்க்க நேர்ந்தது. அதே நாளில் இந்த வினை குறித்தும் படிக்க நேர்ந்தது. ஏதோ நினைப்பில் ஒப்பிட்டு பார்த்தால் அங்கே கிடைத்தது , இப்போது நான் எழுதிவரும் மறைந்த திருக்குறள் அறிவியலைப் பேசும் கவிதை நாவலுக்கான கரு.

தமிழிலும் விஞ்ஞானம் உண்டு என்பதை மாற்றி விஞ்ஞானம் தமிழில்தான் உண்டென்பதை உணர்த்த வேண்டிய பொறுப்பை எனக்கு உணர்த்திய குறளென்பதால் என்னைக் கவர்ந்த குறள் என்கிற வரிசையில் இதற்கு எப்போதும் முதலிடம்.
நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு