தாய்மொழியும் கையெழுத்தும்

மொழி வெறும் மொழியாக மட்டும் பார்க்கப்படும் தேசத்தில்,
இருப்பதைக்காட்டிலும் அழிந்து போவது அந்த மொழிக்கு நல்லது என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் ஒரு கவிதை நாவலில் கண்டு,வெகுநேரம் கண்மூடிச் சிந்திக்க வைத்த வரிகள் இதோ.

பெயர்க்கப்படுவது தெரியாமல்,
பெயர்க்கப்பட்டால்
பெயர்வது தெரியாமல்
பெயர்வார்கள்.

இது அந்த கதையில் வரும் ஒரு ஆளுநன் பேசும் பேச்சு .என்னே தெளிவு. ஒரு விரும்பத்தகாத மாற்றத்தை மக்களுக்கு தரப்போகும்முன் அதை அவர்கள் விரும்பவேண்டிய கட்டாயத்தை முதலில் உருவாக்குவது சிறந்த பயிற்சியும் கூட.அடிப்படையில் தேவைகள் மாற்றியமைக்கப்பட்டு பெயரும் இடத்தில் அவற்றைக் காட்டி அந்த நிலத்தைப் பறிக்கும் அரசியலை சொல்கிற நாவல் அது. இறுதியில் இங்கும் அங்குமாய் மக்கள் சிதறி பிளவுற்று இரு நாகரிகமுள்ள ஊர்களாகி சண்டையிட்டு அழிந்து போவர். அவ்வளவு தெளிவு. அடிப்படையையே மாற்றிவிட்டார்கள்.நல்லது செய்வதில் இவர்கள் இவ்வளவு தீர்க்கமுள்ளவர்களாய் ருப்பதில்லையே. சரி விட்டுதள்ளுங்கள்.விஷயத்தை கவனிப்போம்.

ஒரு இனத்தை அழிக்க முதலில் அவர்களது மொழி மீது படையெடுப்பதுதான் பிள்ளையார் சுழி.

ஏன் தெரியுமா?.

தாய்மொழி பழக்கமில்லாமல் போகிறபோது தாய்மொழி சார்ந்திருக்கிற மற்றும் தாய்மொழியைச் சார்ந்திருக்கிற மரபுகளும்,வழக்கங்களும்,கலை உள்ளிட்ட சகலமும் தானாக வெறுக்கப்படும்.

இப்படி ஒரு புலம்பெயர்வு ஆஸ்திரேலிய மண்ணில் நடத்தப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இது ஓர் இனப்படுகொலை. அகிம்சை வழி நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று அதை இன்று வரை உலகம் பேசுகிறது.

குழந்தைகள் கடத்தப்பட்டனர்.
பெயர் மாற்றப்பட்டது.
தாய்மொழி மறைக்கப்பட்டது.
கலாச்சாரம் மறக்கடிக்கப்பட்டது.
வேற்றுக் கலாச்சாரம் பழக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு வேற்று மொழிகளில் இடப்பட்ட வேறு பெயர்கள் பிடித்துபோயின. நாளடைவில் மதமாற்றம். இப்போது ஒரு 20 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் சொந்த மண்ணில் விடப்பட்டனர். யோசித்துப் பாருங்கள். இப்போது சொந்த மரபை வெறுக்கிறவர்கள் தான் அந்த மண்ணின் மைந்தர்கள்..தானாக அந்த இனம் கலந்துபட்டுச் சீர்குலையும். இப்படியும் ஓர் இனப்படுகொலை.
கத்தியின்றி ரத்தமின்றி நடந்த கலியுக இனப்படுகொலை.

அப்படி ஒரு அகிம்சை இனப்படுகொலை அடுத்த 50 ஆண்டுகளில் நடக்கப்போவது தமிழகத்தில்தான் என்கிற பயம் எத்தனை பேருக்கு வருகிறது..

இல்லை..இல்லை......
அதெல்லாம் அப்போது..இன்றில்லை என்கிறீர்களா.. இன்றில்லை. இனிவரலாம் இல்லையா?.

1938 பெண்கள் மாநாடு. தீர்மானங்கள் பட்டியலில் ஒரு தீர்மானத்தின் ஒரு வரி.
தமிழில் கையெழுத்திடத் தெரியாத தமிழ்மக்களைக் குறித்துக் கவலைகொள்கிறது.

அன்று முதல் இன்று வரை அந்த ஒருகவலை மட்டும் ஓய்ந்தபாடில்லை.  மீண்டும் மீண்டும் தாய்மொழிக் கையெழுத்து குறித்த முன்னெடுப்புகள் ஏதோ ஒன்றை நமக்கு அறிவுறுத்துகின்றன.

நம் தாய்மொழிமேல் நமக்கு வெறுப்பு ஒன்றுமில்லை. ஆனால் அவசியமற்ற நிலை இருக்கிறது.

உலகில் தாய்மொழியே அவசியமற்ற சூழல் தமிழகத்தில்தான் நிலவுகிறது. அவசியமற்றதால் பயன்பாட்டு வழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆங்கிலம் அவசியமான ஒன்றாகப் படுகிறது. உண்மையில் ஆங்கிலம் உலகநாடுகள் அத்தனைக்கும் பொதுமொழி அல்ல. நாம் அதிகமாக ஆங்கிலம் புழங்கும் நாடுகளைப் பார்ப்பதால் உலக மொழியாகத் தெரிகிறதே ஒழிய வேறொன்றில்லை.

இப்போது கையெழுத்தைத் தாய்மொழியில் இடுவதற்கான முயற்சிகள் உலகெங்கும் நடந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலே சொன்ன பெயர்ப்பது தெரியாமலே பெயர்வது என்கிற கலாச்சார மாற்றை உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது..

மெல்ல மெல்ல நாம் மேலைத்தேய இசையையும்,உணவையும் விரும்புவதன் காரணம், நம் உளவியல் ரீதியான விருப்பங்களை நம் அடையாளம் என்கிற குறி நம் மொழியில் இல்லாததே என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவு கொள்வோம்..
தாய்மொழி பழக்கமில்லாமல் போகிறபோது தாய்மொழி சார்ந்திருக்கிற மற்றும் தாய்மொழியைச் சார்ந்திருக்கிற மரபுகளும்,வழக்கங்களும்,கலை உள்ளிட்ட சகலமும் தானாக வெறுக்கப்படும்.

இப்போது நீங்களே யோசியுங்கள். மனிதனுக்கு ஏன்? தாய்மொழி கையெழுத்து அவசியம்..

சிந்திப்பது...சிறப்பு. 🙏🙏🙏🙏🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்