வழிச்செலவா?வழிப்பறியா?

வழிச்செலவா?வழிப்பறியா?




யானை விலை குதிரை விலை சொல்வது என்றெல்லாம் கேள்விபட்டிருக்கிறோம் அதற்கு எடுத்துக்காட்டு சொல்வதானால் இன்றைய குழந்தைகட்கு பயணவழி உணவகங்களை காட்டித்தான் சொல்லவேண்டும். அப்படி பணம்பிடுங்கும் ஆலைகளாக மாறிவிட்டிருக்கின்றன
அவை. 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது பெரியோர் வாக்கு. ஆனால் இன்றோ உண்டி கொடுத்து உயிரெடுக்கிறாரே என்கிற அளவுக்கு உணவகங்கள் மாறிவிட்டன. கடந்து வந்த காலமாற்றத்துக்கும் நடந்து கொண்டிருக்கும் நடப்புலகின் வேகத்திற்கும் ஈடு கொடுப்பதாய்
எண்ணிக்கொண்டு நாமும் வாழ்க்கைமுறையை முற்றிலுமாய் துரிதப்படுத்திகொண்டே இருக்கிறோம். அப்போதெல்லாம் வெளியூர் பயணம் என்றால் வழிச்செலவுக்கென்று ஒரு குறிப்பிட்டதொகையை ஒதுக்கி திட்டமிடுவோம். அதற்குள் இந்த நொறுக்குத்தீனிகள், ஆட்டோ
செலவு, பயணதொகை, உணவுசெலவு உள்ளிட்ட பலவும் அடங்கிவிடும். ஆனால் இப்போதெல்லாம் திட்டமிடவும் முடிவதில்லை. திட்டமிட்டாலும் திட்டமிட்ட தொகைக்குள் செலவுகள் அடங்குவதுமில்லை. வழிச்செலவுகளுள் ஒன்றான உணவக செலவே இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது. காரணம் பயணவழி உணவகங்களின் வரையறையற்ற அணுகுமுறையும் இராட்சச பணவெறியுமே.

          பசியென்று வருவோரை வேறு வழி இல்லாத நிர்பந்தநிலைக்கு உள்ளாக்கி உணவு விற்கின்றன இந்த பயண வழி உணவகங்கள். இங்கு வருவோர்க்கு இரண்டே வழிகள் ஒன்று அவர்கள் பட்டினி கிடக்க வேண்டும் அல்லது பணத்தையோ தரத்தையோ பற்றி கவலை படாமல் சாப்பிட வேண்டும். இது பாவம் போல் தெரிகிறதே என்று ஒரு பெரியவர் கேட்க, “பாவம் புண்ணியம் பாத்தா பொழைக்க முடியுமாங்க” என்று தன்னை நியாயபடுத்த முயற்சிக்கிறார்.மேலும் உணவகத்தில் பேருந்து நின்ற நேரத்திலேயே பசிப்பது போல் உணர்வார்கள் அல்லதுஎங்கள் ஆள் பண்டங்களின் பெயரை சொல்லி கூவுகிற பொழுது பயணிகளின் பிரயாண களைப்பு பசியாகி விடும். அந்த “பசியை பயன்படுத்தி பணம்பண்ண தெரிஞ்சவந்தானப்பா தொழில்காரன்”என மீசை வேறு முறுக்கி கொள்கிறார் அந்த பயணவழி உணவக உரிமையாளர்.


      சரி. அநியாய விலையானாலும் வேறு வழியில்லை சாப்பிட்டுதானே ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு பயணிகளை வரவைத்து விடுகின்றனர். அதோடு நின்றுவிடவில்லை. உண்மையில் இங்கிருந்தான் இவர்களின் வேலை ஆரம்பமாகிறது. மக்களை யோசிக்க விடாமல் தொடர்ச்சியாக
பேசுவது, குழந்தைகளை பேசவைத்து ஆர்டர் எடுப்பது, அவசரத்தில் குழந்தைகள் சொன்னதை வேண்டுமென்றே கொண்டுவருவது, பின்னர் குழந்தை சொன்னதைத்தான் கவனித்தேன் நீங்கள் சொன்னதை கவனிக்கவில்லை என்று அப்பாவியாக அசடு வழிவது, கேட்காமலே கூடுதலாக சட்னி,சாம்பார்,குருமா குவளைகளை வைத்து விட்டு பணம் செலுத்தும்போது பில்லில் சேர்ப்பது என இது போன்ற இன்ன பிற இதர சித்துகளும் இந்த உணவக நிறுவனத்தின் கைங்கர்யங்களே.

         இது குறித்து உரிமையாளரிடமோ அல்லது உரியவரிடமோ புகார் அளித்தால் அவரும் அவர் பங்குக்கு அந்த சர்வரை திட்டிவைப்பார். ஏதோ அவர் செய்த தவறுக்கு நம்மால் அவர் தண்டை அனுபவித்தார் என்ற திருப்தியில் நாமும் பணத்தை தந்துவிட்டு ( எது
எப்படியோ,சாப்பிட்டு முடித்த பிறகு நாம் என்னதான் செய்வது ) அரைமனதோடு பேருந்துக்கு திரும்புவோம். உண்மையில் அந்த சர்வருக்கு அது தண்டனையும் கிடையாது, அந்த உரிமையாளருக்கு வாடிக்கையாளர்கள் மேல் அக்கறையும் கிடையாது. அவையும் கூட வியாபரத்
தந்திரமே. அத்தனைக்கும் அடிப்படை மீண்டும் இவர்களை தொடர்ந்து பார்க்கப்போவதில்லை.

         இப்போதைக்கு இதை தலையில் கட்டிவிட வேண்டுமென்கிற வியாபார வெறி. சரி அப்படியானால் இவர்களுக்கு வாடிக்கையாளர்களே கிடையாதா? என்றால் அதுதான் தவறு. உண்மையில் இவர்களது வாடிக்கையாளர்கள் பயணிகள் அல்ல. அவர்கள் வெறும் பலியாடுகளே. உண்மையான வாடிக்கையாளர்கள் பேருந்து பொறுப்பாளர்கள் மட்டுமே (ஓட்டுனர்,நடத்துனர்,தனியார் பேருந்தென்றால் உதவியாளர்). இவர்கள் இந்த உணவகங்களின் ஏஜென்ட்கள் போல, பேருந்து பயணிகளை இங்கு கொண்டு வந்து விட்டால் இவர்களுக்கு சாப்பாடுதான் சம்பளம். இந்த உணவகங்கள் இவர்களை நன்கு கவனித்துக்கொள்வதில் கன்னுங்கருத்துமாய் செயல்படுகின்றன. சிறிதும் மனம்கோணாமல் நடந்து கொள்வதும்,
தாமதிக்காமல் கேட்டதை தருவதிலும், அவர்களுக்கென ஸ்பெஷல் உணவுகள் பரிமாறுவதிலும் உணவகங்கள் தங்களுக்குள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொள்ளும்.

              ஆரம்பத்தில் பேருந்து நிலையங்களில் நின்று சாப்பிட்ட பேருந்துகள் இப்போதெல்லாம் பேருந்து நிலையங்களில் சரிவர நிற்பதும் கூட கிடையாது. பயணவழி உணவகங்கள் வழங்கிய சலுகைகள் அப்படி.இதை கண்டு எச்சரிக்கையான அரசு போக்குவரத்து கழகம் அனுமதி பெற்ற உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும், இப்படி இந்த உணவகத்தில் மக்களை
மாட்டி விட்டேன் என்பதை பதிவு செய்யும் விதமாக நடத்துனர் அவர்களது இன்வைஸ் இல் உணவக முதலாளி ஒப்பமிட வேண்டும். 2011 ம் ஆண்டு பயணிகளுக்கும் எங்களுக்கும் வசதியான உணவகங்களில் தான் நிறுத்துவோம் என்று போராடினர் ஓட்டுனர் நடத்துனர்கள் என்பது இங்கு
நினைவில் கொள்ளவேண்டியது. ஆனாலும் அது வீன்போனது. 

என்னவோ அரசும் கூட இதில் சேர்ந்தே செயல்படுகிறதென்பதும் வேதனை அளிக்கிறது.நிற்க.

ஆக, இதிலிருந்து என்ன ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தன்வயிறு தன்னிறைவு அடைவதை யோசிக்கும் சுயநல உணர்வும், பயணிகளை வெறும் பாரமாக மட்டும் நினைக்கும் எண்ணமும்தான் இதற்கு காரணம் என்பது தெளிவாகிறது. சரி அவர்கள் யோசிப்பதில் தவறென்ன இருக்கிறது அவர்களும் மனிதர்கள்தானே ? என்று கேட்பீர்களானால், ஆம் நிச்சயம் அவர்களும் மனிதர்கள்தான் அனால் அவர்களை நம்பி ஏறக்குறைய 60 மனிதர்கள் உடன் வந்ததை எண்ணிப்பார்க்க வேண்டாமா? அவர்களும் அரசாங்க ஊழியர்கள்தானே? மக்கள் மீது பொறுப்பு
அவர்களுக்கும் இருக்கவேண்டும் இல்லையா? கொஞ்சம் சுயநலம் விடுத்து பயணிகளில் பாமரர்களும் உண்டு, புலால் உண்ணாத பிராமணர்களும் உண்டு, பசிதாங்காத பாலகர்களும் உண்டு, பாலுக்கு அழுகிற குழந்தை உட்பட பலரும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    எல்லா உணவகங்களிலும் இதே நிலை அல்ல. விதிவிலக்காக சில உணவகங்கள் குறைந்த விலையிலும் தரமாகவும் அதே சமயம் ஓட்டுனர், நடத்துனரை நல்ல வண்ணம் கவனிப்பதும் உண்டு. அதுபோன்ற உணவகங்களை நாடலாம், அப்படி செய்வது மற்ற உணவகங்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வழிவகுக்கும். வழிச்செலவுக்கு வந்த பணம் வழிப்பறி செய்யப்படுவதை தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத மக்களே. நம் பக்கமும் தவறுண்டு தான்.


       மீண்டும் பழையபடி கட்டுசோறு கலாச்சாரத்திற்கு திரும்புவதும் கூட வழிப்பறியில் இருந்து மீள நல்ல வழிதான். இல்லையென்றால் அவசரத்தாலும், அசமந்தத்தாலும் உணவுக்கு ஏற்பாடு செய்யாமல் வந்ததற்கு அபராதம் என்று மனதை தேற்றிகொள்ளுங்கள். வழிப்பறியை ஏற்றுகொள்ளுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்