மழலை

மலையளவு பொருள்சேர்த்து
   மனமென்ன காணும்
மழலை வானம் மட்டும்தான்
  மணமகிழ்வை தூறும்.

விலையில்லா மதிப்பென்று
    பலஉண்டு இங்கே
மழலைக்கு ஈடான
    மனஇன்பம் எங்கே?

கள்ளச் சிரிப்பழகு.
    கன்னக் குழியழகு.
கண்ணை சிமிட்டியொரு
    பார்வை பார்க்கையிலே
என்னை இழக்க வைக்கும்
    எல்லையிலா பேரழகு..

உள்ளே ஒன்றிருக்க
     உரைப்பது வேறில்லை
சொல்லில் பிழையானால்
     அதுபோல அழகில்லை
  
எது மழலை என்பதற்கு
   என்ன உரை உண்டு - அதில்
என்போல தனித்தனியே
   எல்லார்க்கும் ஒன்று.

கன்னச் சதையழுந்த
  சன்னல் கம்பிதேய்த்து
கண்காட்டி கைகாட்டி
  விடைசொல்லும் வேலையதில்,
வேலையென்ன?வெட்டியென்ன?
  விட்டுவிட்டு ஓடிவந்து
விளையாட ஓரெண்ணம் 
தோன்றிடுதே - இந்த
விந்தைதான் மழலைசக்தி 
மரமண்டையே.!!

கட்டிக் கரும்பந்த
   சுட்டி குழந்தை வந்து
கட்டி..அணைக்கையிலே
   கல்லன்ன? மலையன்ன?
கற்சிலை போல் நின்றிருப்பேன்..

முட்டி முட்டி விளையாடி
    முழுவேகம் தீர்த்தாடி
மூச்சிரைக்கும் வேலையதில்
    மூர்ச்சையாகி நான் வீழ
முழுவெற்றி அவன்கையில்..
    மூத்தவனாய் என்னைஅவன்
கைபிடித்து வழிநடத்த
    அழகியலை

பார்த்தவனாய் நிஜம்மறக்கும்
நானும் மழலை.
நானிந்த
பாரிருக்கும் மட்டுமவன்
ஆளும் மழலை...
   


-  பாம்பன் மு.பிரசாந்த்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

மது செய்யும் மாயம்