நல்லதே நடக்கட்டும்

11.06.2017 அன்று சென்னை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற நல்லதே நடக்கட்டும் என்ற தலைப்பிலான கவிதை.

           நல்லதே நடக்கட்டும்

எழில்மிகு சென்னை நகரினி லேயின்று
எழிலிலக் கியப்பே ரவையினி லேவந்து
அருவிபோல் அறிவுடை கவியோரே அவையோரே
குருவிநான் என்கவியால் வணங்கு கின்றேன்..

தலைவலி தீர்ந்தால் நல்லது தான்
தலைவலிக்கா நாளெல்லாம் நல்ல நாளா?

கையிருப்பு காசெல்லாம்
          கணினிக்குள் நுழைந்தே நம்
பையிருப்பில் அடங்காமல்
          பாரதத்தை வளர்த்துவர,
ஏடறியா ஏழைமுதல்
          எல்லோரும் ஈறாக
கார்டு போட்டு காசுபார்க்கும்
           நாடு நன்னிலை அடையட்டும்
நல்லதே இங்கு நடக்கட்டும்

குடிகெட்ட விவசாயி
        மனம்கெட்டு தினம்சாக
அதுகேட்ட மனமிங்கு
        நெறிகட்டி வலிமேவ
எதில்முட்டி நான் சாக
         தெரியாமல் திண்டாட
தறிகெட்ட பலரிங்கு
          கிரிக்கெட்டை கொண்டாட
பொல்லாத நிலைமாறி
           எப்போது சரியாக,
எல்லாரும் பிழை என்றால்
            எதைசொல்லி நான் நோக..

கண்ணெதிரே செத்தவனை
       என்னயென்றுங் கேளாமல்
கென்னியாக்கு நிதி கொடுத்தால்
        என்னிய்யா நியாயம் இது?
நம்கனவு ஜெயிக்கட்டும்
         நல்லதே நடக்கட்டும்

உறுதியுடன் போராடி
      இறுதியிலே அடிவாங்கி
போராட்டம் செய்ததொரு கூட்டம்.
போராட்டம் முடிந்தபின்னனே
   போராளி என்ற பட்டம்
போட்டுக்கொண்டு திரிவதொரு கூட்டம்..

நதிநீரும் வாராமல்
      சதிசெய்தார் அங்கே..
சதியென்று தெரிந்தாலும்
      விதியென்றார் இங்கே.
சதியோ இது விதியோ அவர்
       கைவிரித்தார் அங்கே..
நம்நீரை பாட்டிலாக்கி
        நம்மிடமே விற்றுவிட்டு
பணம்பார்க்க நம்முன்னே
        பைவிரித்தார் இங்கே...

நல்லநிலை வாராதா
       நம்நாடு செழிக்க
நாமெல்லாம் பிரார்த்திப்போம்
       நல்லதே நடக்க

சோறு போடும் சாமியாக
        கடலை பார்த்தவன் தினம்
மாறி மாறி சுட்டுப் போட
         கடலில் வீழ்கிறான் இது
யாரு போடும் திட்ட மென்று
         அறிய பார்க்கிறான் பூவில்
நாரு போல உள்ளிருந்தே
          அழிந்து போகிறான்...  இதிலே

செத்தவனை நாயகனாக்கி
பெத்தவரை பேட்டி கண்டு
சத்தமின்றி காசுபார்க்கும்
மெத்தனத்தை என்ன சொல்ல?

சோறுபோடும் கடலில் சுட்டு
கூறுபோடும் நிலையை விட்டு
மாறும் நன்னிலை வளரட்டும்
பாரில் நல்லதே நடக்கட்டும்..

சொன்னதெல்லாம் சொச்சம்
என்னென்னவோ மிச்சம்
கன்னித்தீவு முதலாக
கச்சதீவு வரையாக
காஷ்மீர் முதலாக
கன்யாகுமரி வரையாக

எந்நாளும் நமைசுற்றி
  நல்லதே நடக்கட்டும்..
என்னாலே ஒருதவறும்
   நடக்காது இருக்கட்டும்..

     என்றும் அன்புடன்
              உங்கள்
    பாம்பன்.மு.பிரசாந்த்
     7299585174
      prasanthraman30@gmail.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்