கே டி மனம் (#காத்திருப்பு)

காத்திருப்பது சுகம் என்பது முன்னோர் சொல்லி வைத்தது.அந்த சுகானுபவம் இன்று நிறைய கிடைத்தது.

ஆனால் வெறுமனே காத்திருப்பது என்பதை போன்ற வெறுப்பான சுகம் வேறெதுமில்லை .இது என் அனுபவம் இன்றெனக்கு அளித்த அறிவு.

வேலைகள் நிறைய நிலுவையில் மட்டுமே கிடக்க, அவற்றை பிறகுதானே செய்ய முடியும் என்கிற சமாதானத்தை தந்து என் சோம்பேறித்தனத்துக்கு இந்த காத்திருப்பும் கை கொடுக்கிறது..
ஒருவகையில் இதுகூட நல்லதுதான் போலும்.

வேலை இருக்கிறது வேலை இருக்கிறது என்று யாரோ சொன்ன வேலைக்காக என்னை நானே அர்ப்பணித்து கொள்வதை விடவும், வேலை இல்லை என்றால் படிக்கிறேன் பேர்வழி என்று யாரோ ஒருவர் சொன்னதை தெரிந்துகொள்ள முயற்சிப்பதை விடவும் இந்த வெறுமனே காத்திருக்கும் வேளையில் என் சிந்தை என் பார்வையில் உலகத்தை யோசிக்க தொடங்குகிறது என்பதும் லாபமாக தான் இருக்கிறது.

பார்த்தீரா..என் சோம்பேறித்தனத்துக்கு  இரைபோட்டு இசைந்துகொடுக்கும் இந்த காத்திருப்புக்கு வக்காலத்து வாங்க தொடங்கிவிட்டது என் மனம்..கே டி மனதாயிற்றே...

                                               
என் போர்க்கால ஆயுதங்களாம் பேனாவும் காகிதமும் கைவிட்டு பை  எனும் உறையுள் உறையும் போது நான் சமான்யனாகவே உள்ளேன். 

என்னை வெறும் உடம்பாகவே என் மனம் கருதும்.ஆனால் கத்தியும் கேடயமுமாய் பேனாவும் சிந்தையும் ஒன்றுசேர்கிற வேளை ஒரு போராளியாக என்னை உணருவேன் நான். ஆனால் இந்த காத்திருப்பில நான் அவைகளையும் இழந்து வெறுமனே  எண்ணிய விரல்களையே மீண்டும் மீண்டும் எண்ணியபடி மானசீகமாக கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

என் நெஞ்சுக்கு நெருக்கமான, எப்போதும் என் இதயத்துடிப்பை கேட்டு கொண்டே இருக்கிற என் காதலியும் இப்போது என்னோடில்லை. என் கைபட்ட கணமே கர்ப்பம் தரித்து.....-ஐயேயோ நீங்க வேற அதெல்லாம் இல்ல. - என் கைபட்ட கணமே கர்ப்பம் தரித்து எழுத்து குட்டிகளை ஈன்று கொண்டே இருக்கிற என் நெஞ்சுக்கு நெருக்கமான பேணா என் காதலி. -அதுக்குள்ள என்னென்னவோ நெனச்சுடீங்களே- ..ஐ அம் பாவம்..

அப்படி வெறுங்கையோடு காத்திருக்கிறேன்.வந்த வேலையென்ன என்பதே அப்பப்போ மறந்து போக, அதை ஞாபகப்படுத்துவதை மட்டும் தனி ஒரு வேலையாக பார்த்தவண்ணம் காத்துக்கொண்டு இருக்கிறேன்...

வாழ்க்கையே காத்திருப்பு தானே..உலகத்தை பார்க்க 10 மாத காத்திருப்பு. அது முதல் தொடங்கி சாகும் வரை ஏதேதோ செய்துகொண்டே மரணத்திற்காக காத்திருப்பு.. அப்படியானால் இந்த காத்திருப்பு வாழ்க்கையை எனக்கு கற்றுதருகிறது போலும். விரைவில் கற்றுக் கொள்வேன். பார்த்தீர்களா...கே டி மனம் என்று மறுபடியும் நிரூபித்து விட்டது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்